இன்று ஆடி பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
|பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை லேசாக பெய்து வருகிறது. இருப்பினும் மழை எச்சரிக்கை இல்லாததால் பக்தர்கள் இன்று மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அதன்பின் அவர்கள் மலையேறினர். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்துள்ளனர்.
சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் ஆடி பவுர்ணமி என்பதோடு, விடுமுறை நாளாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional