சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.. அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூர விழா
|திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அம்பிகைக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. இந்த நாளில் அம்மன் கோவில்களில், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா நாளை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலும் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. அதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும்.