அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யும் 'ஆடிப்பூரம்'
|ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.
1-8-2022 ஆடிப்பூரம்
ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணி விக்கும் நிகழ்வும் நடத்தப்படும். இந்த நாளில் பக்தர் கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
*திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். அதில் 4-ம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளையல் அலங்காரம் நடத்துவார்கள்.
*திருவாரூர் - கமலாம்பாள், நாகப்பட்டினம் - நீலாயதாட்சி, திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆகிய சிறப்புமிக்க அம்மன்கள் அருளாட்சி புரியும் திருக்கோவில்களிலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
*சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.
*திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மனின் மூர்த்தமானது, அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அம்மன் தன்னுடைய மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகியவையே அபிஷேகம் நடைபெறும் நாட்களாகும்.