நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு: தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம்
|காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும்.
விவசாயம் செழிப்பதற்கு தேவையானது நீர். எனவே, நீரை போற்றும் விதமாக, நதிகள் அனைத்தும் புனிதம் மிக்கவை என்று நம் முன்னனோர்கள் சொல்லி வைத்தனர். அவற்றுக்கு வருடத்தில் ஒருமுறை வழிபாடுகள் செய்யவும் அவர்கள் ஒரு ஏற்பாட்டை செய்தனர். அப்படி நதித் தாயை வழிபடும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான், ஆடி மாதம் 18-ந் தேதி வரும் 'ஆடிப்பெருக்கு' நிகழ்வாகும்.
இந்த விழாவானது, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கிறது.
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளை மறுதினம் (ஆகஸ்டு 3) கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். சுமங்கலி பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு தாலிக் கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
தாலிக்கயிறு மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறங்கு பொழுதில் தாலி மாற்றிக் கொள்ளக் கூடாது. இறங்குபொழுதில் நல்ல நேரம் இருந்தாலும் தாலி கயிறு மாற்றுவதை தவிர்ப்பது நல்லது.
தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் :
காலை 07.35 முதல் 08.50 வரை
காலை 10.35 முதல் 11.55 வரை
இந்த ஆண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, காவிரியில் இறங்குவதை மக்கள் தவிர்க்கவேண்டும்.
காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும். ஆடிப் பெருக்கு வழிபாட்டை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு மிக விசேஷமான நாள் என்பதால் ஆடிப்பெருக்கு வரும் நாளில் கிழமை, நட்சத்திரம், திதி என எதுவும் பார்க்க வேண்டியதில்லை. காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்ளலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional