ஆடி செவ்வாய்க்கிழமையில் அவ்வையார் விரதமும் கொழுக்கட்டை படையலும்
|ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களிலும் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆடி செவ்வாய் அன்று பெண்கள் ஒன்றுகூடி அவ்வையார் விரதம் மேற்கொள்வார்கள். ஆடி செவ்வாய் இரவு, ஊரில் உள்ள வயதில் மூத்த சுமங்கலி பெண் தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினால் உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து அவ்வையாருக்குப் படைத்து அவ்வையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவார்.
இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர். ஆண்களுக்கு கொடுக்கக்கூடாது. இரவு நேரத்தில்தான் இந்த நோன்பு கடைபிடிக்கப்படும். இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக நம்பிக்கை.
ஆடி செவ்வாயில் அவ்வையார் விரதம் இருந்து வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடி செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.
அவ்வையார் விரத வழிபாட்டை தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். ஆடி மாதம் விரதமிருக்க முடியாதவர்களுக்கு, தை மற்றும் மாசியில் தொடரலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional