ஆடி மாத முதல் செவ்வாய்.. வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் ஏராளமான பெண்கள் வழிபாடு
|வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
சென்னை,
வில்லவன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்த அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. பின்னர் அவர் சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். அவர் தோஷம் நீங்கப்பெற்ற தலம் சென்னை வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவில். அங்காரக சேத்திரம், செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்புப் பெயர்களும் இந்த கோவிலுக்கு உண்டு.
பெருமை பெற்ற இந்த கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீசுவரரை ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகுவதுடன், நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதனடிப்படையில் ஆடி மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமையான நேற்று வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி, அம்பாள் அருள்பாலித்தனர்.
ஆடி முதல் வார செவ்வாயை முன்னிட்டு கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண் பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் இருக்கும் நாகாத்தம்மன் சன்னதியில் உள்ள புற்றுக்கு பெண்கள் பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional