முன்னோர்கள் ஒருவேளை மறுபிறவி எடுத்திருக்கலாம்.. அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
|பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
மரணம் அடைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களை திருப்திப்படுத்தி அவர்களின் ஆசியை பெறுவதற்காக அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை கூடுதல் சிறப்புக்குரியவை. சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இதுபோன்ற சடங்குகளை முறைப்படி செய்வது வழக்கம்.
அவ்வகையில் ஆடி அமாவாசையான இன்று தாய்-தந்தையர் மற்றும் முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வழங்கும் தர்ப்பணத்தால் திருப்தி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அதேசமயம், நம் முன்னோர்களில் தாயோ, தந்தையோ அல்லது பாட்டியோ, பாட்டனோ மறுபடியும் பிறவி எடுத்திருந்தால், அவர்களது திருப்திக்காக நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றால் என்ன பலன்?' என்ற கேள்வியும் எழுகிறது.
நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) சேர்க்கிறார்கள். அதே சமயம் அவர்கள் செய்த கர்ம வினைப்படி மறுபிறவி எடுத்திருந்தால், அந்த ஜென்மத்திலும் பசி இல்லாமல் இருக்க அந்தந்த சிரார்த்தத்திற்கு ஏற்ப பித்ரு தேவதைகள் உணவை வழங்குவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் நாம் செய்யும் சடங்குகளுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அத்துடன், பித்ரு தேவதைகளின் ஆசியும் கிடைக்கப்பெறும்.
"மனிதன் இறக்கும்போது, ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். அதற்கு ப்ரேத சரீரம் என்று பெயர். இந்த ப்ரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி, அந்த ப்ரேத சரீரத்திலிருந்து ஜீவன் விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச் சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம். அதன்பிறகு கூட அமாவாசையன்றும், ஆண்டு தோறும், திதியன்றும் சில கர்மாக்களைச் செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்திருந்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான். ஜீவனுக்கு 'தன்னுடைய ஆத்மாவும், ஈஸ்வரனுடைய ஆத்மாவும் ஒன்று' என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு" என்பது தயானந்த சுவாமிகள் அளித்த விளக்கம்.
பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional