< Back
ஆன்மிகம்
தர்ப்பணம் செய்ய உகந்த தீர்த்தங்கள்
ஆன்மிகம்

ஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய உகந்த தீர்த்தங்கள்

தினத்தந்தி
|
2 Aug 2024 6:03 PM IST

ஆடி அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள பாண தீர்த்த அருவியில் பொதுமக்கள் நீராடி முன்னோரை வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசை நாளில் புனித நீர்நிலைகளில் நீராடி கோவில் வழிபாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார். திருப்புல்லாணி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடல் தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது நல்லது.

காவிரி பாயும் புனித தலங்களான பவானி, கொடுமுடி ஈரோடு, முக்கொம்பு ஸ்ரீரங்கம், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

மதுரை அழகர்கோவில் நூபுர கங்கையில் நீராட ஆடிஅமாவாசைக்கு முதல் நாளே பக்தர்கள் கூடுவர். அதிகாலையில் நீராடி தர்ப்பணம் செய்து மலை மீதுள்ள ராக்காயி அம்மன். சோலைமலை முருகன், சுந்தரராஜப்பெருமாள் காவல் தெய்வமான 18-ம் படி கருப்பணசாமியை வழிபடுவர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசைக்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவர், பாண தீர்த்த அருவியில் நீராடி முன்னோரை வழிபடுவர். இங்கு ராமபிரான் தன் தந்தையான தசரத சக்கரவர்த்திக்கு பிதுர்கடன் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கத்தை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் ராமரின் மகன்கள் லவ குசரால் உருவான திருக்குளம் உள்ளது. இத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கி தந்தையான ராமபிரானுடன் சேரும் பாக்கியம் பெற்றனர். ஆடிஅமாவாசையன்று கோயம்பேடு குறுங்காலீஸ்வரரை வழிபட்டால் பிதுர் ஆசியும் கிடைக்கும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருவள்ளூர் வீரராகவர், திருவிடைமருதூர் மகாலிங்கம், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவெண்காடு வேதாரண்யேஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர், திருவாரூர் அருகில் உள்ள திலதர்ப்பணபுரி கோவில்களை தரிசித்தாலும் பிதுர் தோஷம் சாபம் தீரும்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

மேலும் செய்திகள்