வேதங்களை மீட்டுக் கொடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாதர்
|ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள மூலவர் 29 அடி நவபாஷாண சிலை என்பதால் தைலக்காப்பு உற்சவம் மட்டுமே நடைபெறும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில், திருக்கோவிலூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம் அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவில். இந்தக் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் அரங்கநாதர் 29 அடி அகலத்தில் 5 தலை ஆதிசேஷனத்தில் சயன நிலையில் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி மடியில் தலையும், பூமாதேவி மடியில் காலையும் வைத்த நிலையிலும், பிரம்மாவிற்கு வேதங்களைப் போதித்த படியும் உள்ள அரங்கநாதரின் கையை, கருடாழ்வார் தன்னுடைய தோளில் தாங்கியிருக்கிறார். தாயார் அங்கநாயகி தனி சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். தற்போதைய திருச்சி திருவரங்கம் கோவிலுக்கு முன்பு தோன்றியதால், இந்தக் கோவில் 'ஆதி திருவரங்கம்' என அழைக்கப்படுகிறது.
வரலாறு
சோமுகன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். இதனால் பூமியையும் சர்வ லோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனிவர்களையும் தேவர்களையும் அடிமைகள் ஆக்கியதுடன் பிரம்மாவிடம் இருந்து வேத மந்திரங்களையும் பறிமுதல் செய்தான். மேலும் அவன் அந்த வேதங்களை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான். எனவே முனிவர்களும், தேவர்களும் தங்களை காத்தருள அரங்கநாதரிடம் வேண்டினர். இதையடுத்து அரங்கநாதர், மச்ச அவதாரம் (மீன் வடிவம்) எடுத்து சோமுகனை கொன்று கடலுக்கு அடியில் வைத்திருந்த வேதங்களை மீட்டு எடுத்து வந்தார். பின்னர் ஆதி திருவரங்கத்தில் வைத்து பெருமாள் பிரம்மாவுக்கு மீண்டும் வேதங்களை அளித்ததாக வரலாறு கூறுகிறது.
திராவிட கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் கோவில் விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு ஒரு வரலாற்று கால தானிய சேமிப்பு களஞ்சியம் உள்ளது. இந்த அரங்கநாத பெருமாள் மகாபலி சக்கரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக இருந்தார் என நம்பப்படுகிறது.
கோவில் அமைப்பு
அரங்கநாதர் கோவில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் அமைந்துள்ளது. அதன் இடது புறத்தில் அரங்கநாயகி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பின்னர் அரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் ஆண்டாள், ராமர், லட்சுமணர், சீதா, பவ்ய ஆஞ்சநேயர் சன்னிதி, பெருமாள் பாதம், பலவித இசை எழுப்பும் ராமர் சிலை, ஆழ்வார் சன்னிதி, கோவிந்தராஜர் ஆகிய சன்னிதிகள் உட்பிரகாரத்தில் உள்ளன. எதிரில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதியும் உள்ளது. தானிய சேமிப்பு பெருங்களஞ்சியம், உணவுக்கூடம் ஆகியவை வெளிப்பிரகாரத்தில் உள்ளது.
இதில் உள்ள ராமர் சிலையில், கல் உள்ளிட்ட ஏதேனும் பொருட்களை கொண்டு தட்டினால், அந்த சிலையில் இருந்து பலவிதமான இசை ஒலிகள் உருவாகிறது. இதனால் தான் அந்த சிலைக்கு 'பலவித இசை எழுப்பும் ராமர் சிலை' என பெயர் கூறப்படுகிறது.
விழாக்கள்
இக்கோவிலில் உள்ள மூலவர் 29 அடி நவபாஷாண சிலை என்பதால் தைலக்காப்பு உற்சவம் மட்டுமே நடைபெறும். கோவிலில் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, பாரிவேட்டை என ஆண்டுக்கு 12 திருவிழாக்களும், தினசரி 6 கால பூஜைகளும் நடைபெறும்.
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். மதிய நேரத்தில் நடை சாத்தப்படாதது என்பது இக்கோவிலுக்கு தனிச்சிறப்பாகும்.
திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அனைத்து முகூர்த்த நாட்களிலும் இந்தக் கோவில் உள் மண்டபத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தாயார் சன்னிதி, மடப்பள்ளி, ராஜகோபுரம் உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் புதிதாக தேர் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
அமைவிடம்
கள்ளக்குறிச்சியில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து 31 கிலோமீட்டர் தூரத்திலும், திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும், ரிஷிவந்தியத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.
வற்றாத நீரில் தீர்த்தவாரி
அரங்கநாத பெருமாளுக்கு மாசி மகத்தன்று 20 கிலோ மீட்டர் தொலைவில் மையனூர் கிராமத்தில் உள்ள கருட மலையில் தீர்த்தவாரி நடைபெறும். கருடனுடன் விஷ்ணு இந்த மலையில் இளைப்பாறும் போது தாகம் எடுத்ததால் மலையின் அடிவாரத்தில் உள்ள பாறையில் கருடன் தன் அலகால் பள்ளம் ஏற்படுத்தி அதில் இருந்து தண்ணீரை கொண்டு விஷ்ணுவுக்கு தாகம் தீர்த்ததாக வரலாறு கூறுகிறது. கருடன் தனது அலகால் தோண்டிய சுனையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். வற்றாத இந்த தண்ணீரை கொண்டு தான் அரங்கநாதருக்கு மாசிமகத்தன்று தீர்த்தவாரி நடைபெறும். மேலும் இந்த கருட மலையில் இருந்து தான் கெடிலம் ஆறு உற்பத்தியாகி கடலூரில் கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் ரங்கநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.