ஆதி திருவரங்கம்
|விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தின் போதே நிறுவப்பட்ட கோவிலாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது.
வைணவ சமயத்தினரின் வழிபாட்டு தெய்வமாக இருக்கும், திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. ஆனாலும் அதைவிடவும் சிறப்பு வாய்ந்த, பழமையான ஒரு திருக்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தின் போதே நிறுவப்பட்ட கோவிலாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது 'ஆதி திருவரங்கம்' என்று வழங்கப் படுகிறது.
தல வரலாறு
அசுரா வம்சாவளியைச் சேர்ந்த சோமுகன் என்ற அரக்கன் கடுமையான தவம் செய்ததன் மூலம் அழியாமையையும், பல ஏற்றங்களையும் பெற்றான். ஆணவத்தையும், அசுரர்களைப் போன்ற மிருகத்தனத்தையும் கொண்டிருந்தான். பூமியையும், வானத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முனிவர்களையும், தேவர்களையும் கீழ்ப் படுத்தி சேவிக்கச் செய்ய விரும்பினான். பூமியையும் வானத்தையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி, தனக்குக் கீழ்ப்படியும் படி கட்டளையிட்டான்.
அவன் பிரம்மாவையும் சிறையில் அடைத்து, அவரிட மிருந்து வேத மந்திரங்களை பறிமுதல் செய்தான். பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஸ்ரீ நாராயணன் (விஷ்ணு) அவர்களிடம் சென்று சோமுகனைக் கட்டுப்படுத்தி தங் களைப் பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ நாராயணன் சோமுகனுடன் சண்டையிடச் சென்றார். அவர் களுக்கு இடையே பயங்கர யுத்தம் வெடித்தது. சோமுகன் தனது மந்திர தந்திரங்கள் அனைத்தையும் இழந்து சோர்வடைந்தான். இனி அங்கேயே தங்கியிருந்தால் தன்னை ஸ்ரீநாராயணன் கொன்று விடுவாா் என்று அவன் அஞ்சினான். கடலுக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டான். ஸ்ரீநாராயணன் 'மத்ஸ்யா' அவதாரத்தை எடுத்து சோமுகனை அடக்கி வேதங்களை மீட்டெடுத்தார். தேவர்களும் முனிவர்களும் உற்சாகமடைந்து ஸ்ரீ நாராயணனை ஆதி திருவரங்கத்தில் வணங்கினர். இந்த கோவிலில் புரட்டாசி, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்
திருவண்ணாமலைக்கும், மணலூர்பேட்டிற்கும் இடையில் ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மணலூர்பேட்டிலிருந்து மினி பஸ், ஆட்டோ, வேன், பேருந்து மூலம் கோவிலை சென்றடையலாம். திருக்கோயிலூரில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.