< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
29 Nov 2022 7:36 AM IST

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

மூவாயிரம் பாடல் என்ற போற்றுதலுக்குரியது, திருமந்திர நூல். இந்த நூலை இயற்றிய திருமூலர், அன்பே சிவம்; சிவமே அன்பு என்பதை எடுத்துரைக்கிறார். அதோடு தியானத்தைப் பற்றியும் பேருரை ஆற்றுகிறார். பெருஞ்சிறப்புக்குரிய இந்நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.

விளக்கம்:-

ஒரு மடங்கு அளவு (16 விநாடிகள்) காற்றை இடது மூக்கு துவாரத்தின் வழியாக இழுத்தல் 'பூரகம்' எனப்படும். அந்த மூச்சுக் காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (64 விநாடிகள்) அடக்கி வைத்திருத்தல் 'கும்பகம்' எனப்படும். அப்படி அடக்கிய மூச்சுக் காற்றை இரண்டு மடங்கு அளவு (32 விநாடிகள்) வலது மூக்கு துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுவதை 'இரேசகம்' என்கிறோம். இவ்வாறு செய்வதே 'பிராணாயமம்' செய்வதன் வழிமுறை. இதைச் சரியாகச் செய்தால், உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து, நற்பண்புகள் கைகூடும். மாறாக வலது மூக்கு துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுத்து, இடது மூக்கு துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதலாகும்.

மேலும் செய்திகள்