வாரம் ஒரு திருமந்திரம்
|திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமந்திர நூலை இயற்றிய திருமூலர், மூவாயிரம் பாடல்களால் சைவ நெறியையும், அதன் தலைவனாக விளங்கும் சிவபெருமானையும் பற்றி பல தகவல்களை தத்துவமாக விளக்கியுள்ளார். அந்த திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்று உண்டு
தம்பால் பறவை புகுந்து உணத்தாள் ஒட்டாது
அம்பு கொண்டு எய்திட்டு அகலத் துரத்திடில்
செம்பொற் சிவகதி சென்று எய்தல் ஆகுமே.
விளக்கம்:-
நறுமணம் கொண்டு பழுத்த பழம் ஒன்று, அருள் மலரில் இருந்து தோன்றியது. அது சிவானந்தம் என்னும் பழமாகும். அந்தப் பழத்தை, காமம், வெகுளி, மயக்கம் என்னும் பறவைகள் உண்பதற்காக வரும். சிவனது திருவடி நினைப்பு என்ற அம்பு கொண்டு அந்த பறவைகளை விரட்டினால், செம்பொன்னை விடச் சிறந்த சிவானந்தக் கனியைப் பெறலாம்.