வாரம் ஒரு திருமந்திரம்
|'அன்பே சிவம்', "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' போன்ற சிந்தனைக்கு
சொந்தக்காரர், திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் நூல், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. சிவபெருமானையும், உலகின் பொதுவான பல தத்துவங்களையும் எடுத்துக்கூறும் இந்நூல் மூவாயிரம் பாடல்களால் நிரம்பியது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
விளக்கம்:- ஐம்புலன்களால் தோன்றுவன, மும்மத யானைகள். இவை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பிளிறிக் கொண்டு, தான் நினைத்தபடி செல்லும் இயல்பு கொண்டவை. அதை அறிந்த நான், அந்த மத யானைகளை அடக்கி, நேரிய வழியில் செல்லும் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். ஆனாலும் அந்த யானைகள் எல்லாவற்றையும் மீறி, தம் விருப்படிப்படி ஓடி, அதிக தீய குணத்தை அடைந்து என்னை நிலைகுலையுமாறு செய்கின்றன