< Back
ஆன்மிகம்
சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம்
ஆன்மிகம்

சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம்

தினத்தந்தி
|
16 Feb 2023 9:20 PM IST

சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் மூன்றும், வேப்ப மரத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தின் முக்கிய திருவிழாவாக, ரத யாத்திரை திகழ்கிறது.

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைந்த புனிதத் தலம், பூரி ஜெகந்நாதர் ஆலயம். இது மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் மிக முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையில், சென்னை புதிய மகாபலிபுரம் (கிழக்கு கடற்கரை சாலை), கானத்தூர்- ரெட்டி குப்பம் சாலையில் ஜெகந்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம், பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பிரதி என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஆலயம் ஒடிசா கட்டிட பாணியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பூரியில் உள்ளது போலவே, சென்னை ஜெகந்நாதர் ஆலயத்திலும் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும், பூரியில் உள்ள தோற்றத்திலேயே அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோவிலின் மேற்பகுதியை அடைய 22 பளிங்கு கல்லால் ஆன படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மரத்தால் செய்யப்பட்டவை. அதுபோலவே சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் மூன்றும், வேப்ப மரத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து கருப்பு கிரானைட், ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்கள் போன்றவை கொண்டுவரப்பட்டு, ஆலயத்தை முழுமைப் படுத்தியிருக்கிறார்கள். கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 1 ஏக்கர் பரப்பளவில் இயற்கையை ரசிக்கும் வகையில் தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மலர்ச் செடிகள் அனைத்தும் ஒடிசா பாணியில் நடத்தப்படும் பூஜைக்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் மலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களும், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்த சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் பல்வேறு சன்னிதிகளும் உள்ளன. சிவபெருமான், விநாயகர், தேவி கஜலட்மி, தேவி பிமலா எனப்படும் துர்க்கை அம்மன், நவக்கிரகம் ஆகியோருக்கு சன்னிதிகள் காணப்படுகின்றன. ஆலயத்தின் ஒரு ஓரத்தில் கற்பகத் தருவும் உள்ளது. ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக, பிரதான நுழைவு வாசலில், கல்லால் ஆன கொடிமரம் ஒன்று காணப்படுகிறது. இது மிகவும் வித்தியாசமாக, பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவர்களிலும், ஆலயத்தின் பிரகாரங்களிலும், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தின் முக்கிய திருவிழாவாக, ரத யாத்திரை திகழ்கிறது. இது பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை நடைபெறும் அதே நாளில் நடத்தப்படுவது விசேஷம். இந்த ரத யாத்திரையின் போது, முதன்மை தெய்வங்களான ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலதேவர் ஆகியோர், கானத்தூர் கிராமத்தைச் சுற்றிலும் வீதி உலா வருவார்கள். இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த ஆலயத்தில் உள்ள ரதமானது, துருப் பிடிக்காத எஃகு மற்றும் மரம், துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. துருப் பிடிக்காத எஃகு ரதத்தைக் கொண்ட ஒரே ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்