ஆன்மீகம் -உங்கள் மனம் புதிதாகும்
|நிச்சயமாக தர்க்கங்களை தவிர்க்கிற தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையான எண்ணங்களை சிறைப்படுத்துகிறவர்களாய் மாறுவீர்கள். ஆகவே நான் சிந்தனையில் ஜெயம் பெறுவது நிச்சயம்.
பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.
'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்ற வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'. (ரோமர் 12:2)
ஆம், நம்முடைய மனது புதிதாக்கப்பட்டால் பழைய கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் எண்ணற்ற தோல்விகள் அனைத்தையும் மறந்து முன்னேறிச் செல்ல முடியும். ஒவ்வொருவருடைய மனது மிகவும் முக்கியம்.
'அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்'. (2 கொரி 10:5)
இன்றைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்களில் ஏற்படுகிற போராட்டங்களே மிகுந்த சவாலாக இருக்கிறது. அவைகளை மேற்கொள்ள முடியாமல் சிந்தனையில் வீணரானவர்கள் ஏராளம். ஆனால் தேவபிள்ளைகளாகிய நீங்கள் தேவன் விரும்பாத எண்ணங்களை மேற்கொண்டு ஜெயம் பெறவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
மனிதனின் தவறான எண்ணங்களே தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்படவைக்கும் பயங்கரமான ஆயுதமாகும். உதாரணமாக நம்முடைய சமாதானத்தைக் கெடுக்கிற பிசாசின் ஆயுதம் தர்க்கமாகும்.
'அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்'. (அப்.15:2)
'அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம் பண்ணினார்கள்'. (அப்.6:9)
மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் தர்க்கங்களைக் குறித்து நீங்கள் வாசிக்கலாம். முதலாம் நூற்றாண்டிலே இப்படிப்பட்ட தர்க்கங்கள் நடைபெற்றது உண்மையானால், கொடிய நாட்களாகிய இக்கடைசிக் காலத்தில் மனுஷனுடைய அன்பு தணிந்து போன நாட்களில் சத்துரு பலவிதங்களில் தர்க்கங்களைக் கொண்டு வருவான் அல்லவா?
எனவே, தர்க்கங்களுக்கு இடம் கொடாதீர்கள். தர்க்கங்கள் தொடங்கும் போதே உங்கள் வாய்க்கு காவல் வையுங்கள். நிச்சயமாக தர்க்கங்களை தவிர்க்கிற தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையான எண்ணங்களை சிறைப்படுத்துகிறவர்களாய் மாறுவீர்கள்.
எங்கள் பரிசுத்தமுள்ள நல்ல ஆண்டவரே! மேற்கண்ட ஆவிக்குரிய சத்தியங்களை நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக மாம்சத்தின் எண்ணங்களை சிறைப்படுத்தவும், ஆவியின் பெலத்தினால் அவைகளை மேற்கொள்ளவும் ஆண்டவரே நீர் உதவி செய்யப் போகிறீர். ஆகவே நான் சிந்தனையில் ஜெயம் பெறுவது நிச்சயம். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.