இந்திரனுக்கு ஒரு குகைக்கோவில்
|நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.
இந்த மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, 'தேவேந்திரன் பொத்தை' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் தேவர்களின் தலைவனான இந்திரனின் குகைக்கோவில் உள்ளது.
ஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோவில்.இங்கு இயற்கையான முறையில் எந்த வறட்சியிலும் வற்றாத அளவிற்கு நீரூற்று சுனை அமைந்துள்ளது.
குறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்லமுடியும். மேலே, இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன். அவர் அருகிலேயே சிவ-பார்வதி, அகத்தியர் ஆகியோரையும் லிங்க மூர்த்தி ஒன்றையும் தரிசிக்க முடிகிறது.
நின்ற கோலத்தில் அருளும் இந்திரனின் நான்கு கரங்களில் இரண்டு, அஞ்சலி ஹஸ்தமாகத் திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலின் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.