100 ஆண்டுகள் பழமையான கோவில்களில் 12-ந்தேதி கும்பாபிஷேகம்: இந்து சமய அறநிலையத்துறை
|100 ஆண்டுகள் பழமையான கோவில்களில் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, கோவில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கும் வகையிலும், பல்வேறு புதிய திட்டங்களும் சேவைகளும், அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வரலாற்றுச் சாதனையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான தக்கோலம் கங்காதீசுவரர் கோவில், நெல்லை மாவட்டத்தில் 123 ஆண்டுகள் பழமையான அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவில், வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பழமையான் வெட்டுவானம், திரவுபதியம்மன் கோவில், 100 ஆண்டுகள் பழமையான 5 கோவில்களிலும், 90 ஆண்டுகள் பழமையான 3 கோவில்கள், 70 ஆண்டுகள் பழமையான 2 கோவில்கள், 50 ஆண்டுகள் பழமையான 15 கோவில்கள், 40 ஆண்டுகள் பழமையான 10 கோவில்களிலும் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பழமையான கோவில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில், திருமுக்தீசுவரர் கோவில் திருப்பணிகள் மற்றும் 3 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்ற சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில்களில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.