< Back
உலக செய்திகள்
ஜி-7 உச்சி மாநாட்டில் உக்ரைன் பிரச்சினை குறித்து ஆலோசனை

கோப்புப்படம்

உலக செய்திகள்

'ஜி-7' உச்சி மாநாட்டில் உக்ரைன் பிரச்சினை குறித்து ஆலோசனை

தினத்தந்தி
|
22 May 2023 4:32 AM IST

ஜி-7 உச்சி மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஹிரோஷிமா,

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்றனர்.

இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். அவர் ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

அந்தவகையில் பிரதமர் மோடியையும் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

அமைதி மற்றும் நிலைத்தன்மை

இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஜி-7 செயல்பாட்டு அமர்வு நடந்தது. இதில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்று ரஷியாவின் தாக்குதல் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளை எடுத்துக்கூறினார்.

முன்னதாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தலைவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

மாலையில் சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான விவாதங்கள் நடந்தது. இதிலும் ஜெலன்ஸ்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

3 நாட்கள் நடந்த இந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இதில் உக்ரைன் விவகாரம், பொருளாதார பாதுகாப்பு, பசுமை முதலீடுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி போன்றவை முக்கிய இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்