சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தாக்குதல் நடத்தினால் பதிலடி மிகவும் சக்திவாய்ந்தாக இருக்கும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
|தங்களது சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.
கீவ்,
உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது:
சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, ரஷிய மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அத்தகைய நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டால், அதற்கான உக்ரைனின் பதிலடி மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றாா் அவா்.
ரஷியப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் கொண்டாடுகிறது.
அந்த நாளில், உக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், அத்தகைய தாக்குதல்களுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா் ஜெலென்ஸ்கி தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.