நீங்கள் ஒரு நாள் சுட்டு கொல்லப்படுவீர்கள்; இஸ்ரேல் பிரதமர் பற்றிய துருக்கி மந்திரியின் பதிவால் சர்ச்சை
|நீங்கள் ஒரு நாள் சுட்டு கொல்லப்படுவீர்கள் என இஸ்ரேல் பிரதமரை பற்றிய துருக்கி மந்திரியின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அங்காரா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் படைகளும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. காசா மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில், கட்டிடங்கள் பல சேதமடைந்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழியே தாக்குதல் நடத்த கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார். இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை மந்திரி நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில், ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள் என தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.