அப்படியே சாப்பிடலாம்... ஊசி வழி, நாசி வழி தடுப்பூசி இனி வேண்டாம்; நிபுணர்கள் தகவல்
|ஊசி வழி, நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் தயாராக உள்ளனர்.
வெல்லிங்டன்,
உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் இந்தியாவும் அடங்கும். எனினும், கடந்த சில மாதங்களாக நாட்டில் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.
இந்நிலையில், ஊசி வழி தடுப்பூசிக்கு பதிலாக சற்று எளிய முறையில் மருந்து எடுத்து கொள்ளும் வகையில், நாசி வழி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கண்டுபிடிப்புகளில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இவற்றில் பாரத் பயோடெக் நிறுவனமும் அடங்கும். இந்த முயற்சியின் பலனாக, கண்டறியப்பட்ட இன்கோவேக் என்ற நாசி வழி கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
ஜனவரி 4-வது வாரத்தில் இருந்து இந்த இன்கோவேக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என தகவல் வெளியானது.
கொரோனாவுக்கு எதிராக முதல் மற்றும் 2-வது டோசாகவும் மற்றும் பூஸ்டர் டோசாகவும் இன்கோவேக் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் அம்சம் ஆகும்.
இந்த நிலையில், ஊசி வழி மற்றும் நாசி வழி தடுப்பூசியை விட மிக எளிதில் மக்களை சென்றடையும் வகையிலான கண்டுபிடிப்பில் ஆய்வாளர்கள் இறங்கி உள்ளனர். இதன்படி, அப்படியே சாப்பிடலாம் என்பது போல் கொரோனா மருந்துகளை வாய் வழியே எடுத்து கொள்வதற்கான முயற்சியை மருத்துவ நிபுணர்கள் விரிவுப்படுத்தி உள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு கியூ.ஒய்.என்.டி.ஆர். (QYNDR) என பெயரிட்டு உள்ளனர். இதன் முதல் கட்ட மருத்துவ பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும், விரிவான, நவீன பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள கூடுதல் நிதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், அவற்றை விரைவில் சந்தைப்படுத்த முடியும். இதுபற்றி கொரோனா மருந்து தயாரிப்பாளரான கைலே பிளானிகன் கூறும்போது, இந்த கொரோனா தடுப்பு மருந்து, கைண்டர் (இரக்கம் வாய்ந்த) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது, மிக மென்மையான வழியில் உட்செலுத்தப்படும் என கூறுகிறார்.
நியூசிலாந்தில் நடந்த மருத்துவ பரிசோதனை முயற்சி முடிவுகள் நம்பிக்கையை ஊட்டுகின்றன. தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்க கூடிய ஒன்றாக கியூ.ஒய்.என்.டி.ஆர். இருக்கும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.