
'நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்' - பிரதமர் மோடிக்கு எகிப்துவாழ் இந்தியர்கள் புகழாரம்

பிரதமர் மோடியை சந்தித்த எகிப்து வாழ் இந்திய மக்கள், “ நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்” என புகழாரம் சூட்டினர்.
கெய்ரோ,
பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு கெய்ரோ நகரில் ரிட்ஜ் காரல்டன் ஓட்டலில் அவருக்கு எகிப்து வாழ் இந்திய மக்கள் சந்தித்து அவருக்கு மூவர்ணக்கொடிகளை அசைத்தும், "மோடி மோடி", " வந்தே மாதரம்" எனவும் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
ஜீனா என்ற எகிப்து பெண் புடவை அணிந்து வந்து பிரதமர் மோடியை பிரபலமான "யே தோஸ்தி ஹம் நகி" என்ற 'ஷோலே' படப்பாடலைப் பாடி வரவேற்றார். தான் இந்தியாவுக்கு வந்திராதபோதும், சிறிதளவில் இந்தி தெரியும் என்றும் அவர் பிரதமர் மோடியிடம் கூறினார்.
அதனால் கவரப்பட்ட பிரதமர் மோடி, அந்தப் பெண்ணிடம், "நீங்கள் எகிப்தின் மகளா அல்லது இந்தியாவின் மகளா என்று யாராலும் சொல்லி விட முடியாது" என்று கூறி பாராட்டினார்.

'நீங்கள் இந்தியாவின் நாயகன்'
தொடர்ந்து எகிப்துவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி குழு, குழுவாக சந்தித்துப்பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடியிடம், " நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்" என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள்.
அவர்களிடம் பிரதமர் மோடி, "வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட ஒவ்வொரு இந்தியரின் முயற்சிகளும், நாட்டின் வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவும் ஒவ்வொருவரின் நாயகன். நாட்டின் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அதனால் நாடு முன்னேறுகிறது. உங்களின் கடினமான உழைப்பும், அர்ப்பணிப்பும் பலனைத் தருகிறது" என குறிப்பிட்டார்.
பிரதமர் நெகிழ்ச்சி
எகிப்து வாழ் இந்தியர்கள் அளித்த வரவேற்பில் பிரதமர் மோடி நெகிழ்ந்து போனார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எகிப்தில் இந்தியர்கள் அளித்த உற்சாக வரவேற்பினால் நெகிழ்ந்து போனேன். அவர்களது ஆதரவும், அன்பும் உண்மையிலேயே நம் நாடுகள் இடையேயான காலத்தால் நிலைத்த பிணைப்பினைக் காட்டியது. எகிப்து மக்கள் இந்திய உடைகளை அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்க அம்சம். உண்மையிலேயே இது நமது பகிரப்பட்ட கலாசார தொடர்புகள்தான் என்றே சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பிற சந்திப்புகள்
* தனது சொந்த மாநிலமான குஜராத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள போரா சமூக மக்களையும் பிரதமர் மோடி சந்தித்துப்பேசினார்.
* எகிப்து நாட்டின் தலைமை முப்தி டாக்டர் சாவ்கி இப்ராகிம் கரீம் அல்லாமையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவர்கள் இரு தரப்பு உறவுகள் குறித்தும், சமூக நல்லிணகத்தை ஏற்படுத்துவது பற்றியும், பயங்கரவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் எதிர்கொள்வது குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
* ஹசன் அல்லாம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹசன் அல்லாமை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
* எகிப்து எழுத்தாளரும், பெட்ரோலிய வல்லுனருமான டாரெக் ஹெக்கியையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
* யோகா பயிற்சியாளர்களான நாடா ஏடெல்லையும், ரீம் ஜபாக்கையும் சந்தித்துப் பேசினார். இருவரும் யோகாவை எகிப்து முழுவதும் பிரபலமாக்குவதற்கு எடுத்து வருகிற முயற்சிகள் பாராட்டத்தக்கவை என பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
போர் நினைவிடத்தில் மரியாதை
பிரதமர் மோடி ஹெலியோபொலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவர், முதல் உலகப்போரின்போது, எகிப்திலும், பாலஸ்தீனத்திலும் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இந்தியப் படைவீரர்கள் 3,799 பேர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெய்ரோ சென்றிருந்தபோதும் இங்கு சென்று மரியாதை செலுத்தியது நினைவுகூரத்தக்கது.
1000 ஆண்டு பழமையான மசூதியில் பிரதமர்
பிரதமர் மோடி, கெய்ரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள 1000 ஆண்டு பழமையான அல் ஹக்கீம் மசூதிக்கு சென்றார். இந்த மசூதி இந்தியாவைச் சேர்ந்த தாவூதிபோரா சமூகத்தினரால்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1012-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதியின் சுவர்களிலும், கதவுகளிலும் உள்ள நுணுக்கமான செதுக்கப்பட்ட கல்வெட்டுகளை பிரதமர் பாராட்டினார்
இந்த மசூதி கெய்ரோவின் 4-வது பழமையான மசூதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிடுகளைப் பார்வையிட்டார்
பிரதமர் மோடி, கெய்ரோ புறநகர் கிசாவில் அமைந்து, உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிற பிரமிடுகளைஅந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலியுடன் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக, நைல் நதியின் மேற்குக்கரையில் பாறை பீட பூமியில் அமைக்கப்பட்டுள்ள 4-வது வம்சத்தின் 3 பிரமிடுகளைப் பார்த்து வியந்தார்.