< Back
உலக செய்திகள்
சவுதி அரேபியாவில் எகிப்து, ஏமன் உள்பட 11 அரபு நாட்டு குழுவினருக்கு யோகா பயிற்சி
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் எகிப்து, ஏமன் உள்பட 11 அரபு நாட்டு குழுவினருக்கு யோகா பயிற்சி

தினத்தந்தி
|
28 Dec 2022 2:35 PM IST

சவுதி அரேபியாவில் முதன்முறையாக சான்றளிக்கப்பட்ட யோகா ஆசிரியை எகிப்து, ஏமன் உள்பட 11 அரபு நாட்டு குழுவினர்களுக்கு பயிற்சிகளை வழங்கி உள்ளார்.


ஜெட்டா,


சவுதி அரேபியாவில் அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அதன் பயிற்சி முறைகளை ஊக்குவிக்கவும் முடிவானது.

இதன் ஒரு பகுதியாக பள்ளிகள் மற்றும் பல்கலை கழகங்களில் யோகாவை முதலில் அறிமுகப்படுத்தும் திட்டம் முடிவானது. சவுதி அரேபியாவில் உள்ள பள்ளி கூடங்களில், யோகாவை கற்பித்தல் மற்றும் பயிற்சி முறைகள் செய்வதற்கு ஏற்ற வகையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் அந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து பல்கலை கழகங்களிலும் உள்ள பிரதிநிதிகளுக்கும் யோகா பற்றிய அறிமுக சொற்பொழிவு நடத்தப்பட்டது. இந்த சொற்பொழிவானது, மனம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது.

இதற்காக ரியாத் நகரில் சவுதி பல்கலை கழகங்களின் விளையாட்டு கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு, சவுதி யோகா கமிட்டி இந்நிகழ்ச்சியை நடத்தியது.

இதன்படி பாரம்பரிய யோகா மற்றும் யோகாசன விளையாட்டு ஆகியவற்றை சவுதியில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் அறிமுகப்படுத்தும் நோக்கம் செயல்பாட்டுக்கு வரும். யோகாவை, பல்கலை கழகங்களின் வளாகத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.




இதுதவிர உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தொழில்முறை யோகாசன விளையாட்டு பயிற்சிகளில் மாணவர்களை இணைய செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, இரு பாலின மாணவர்களும் பயிற்சிகளை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், அரபு இளையோர் அதிகாரமளித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, விளையாட்டு அமைச்சகம் கடந்த 22-ந்தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரையிலான யோகா பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

இதற்காக 11 அரபு நாடுகளை சேர்ந்த குழுவினர் வருகை தந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன், பாலஸ்தினம், எகிப்து, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, துனீசியா மற்றும் மொரீசானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.




இதற்காக, சவுதி அரேபியாவில் முதன்முறையாக நூப் மர்வாய் என்ற ஆசிரியைக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது. இவர் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் ஆவார். அக்குழுவின் தலைவராகவும் உள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் பெற்று, தங்களது வாழ்வின் தரம் மேம்பாடு அடைய செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நாடுகளுக்கு இடையே அமைதிக்கான செய்தியை கொண்டு வர கூடிய யோகாவானது, இன்றைய உலகின் சவாலான சூழலில் எப்படி தேவையான ஒன்றாக உள்ளது என்பது பற்றியும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

நம்முடைய சகோதர, சகோதரிகளின் உடல் மற்றும் மன ரீதியிலான ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கான இந்த அழகிய கலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பை வழங்கியதற்காக விளையாட்டு அமைச்சகத்திற்கு உண்மையில் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்