உள்நாட்டுப்போர் நடக்கும் ஏமனில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
|உள்நாட்டுப்போர் நடக்கும் ஏமனில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 16-ந் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஒக்கியாநிஸ் எகோ டேங்கர்ஸ் கர்ப்பரேஷனின் நிசோஸ் கீ என்ற எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அந்த கப்பல், மார்ஷல் தீவு கொடியேந்தி வந்த எண்ணெய் கப்பல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த டிரோன் தாக்குதலில் தங்கள் கப்பலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், "டிரோன் தாக்குதலால் கப்பல் பாதிக்கவில்லை. எந்த மாசுபாடும் இல்லை. அனைத்து சிப்பந்திகளும் பாதுகாப்பாக உள்ளனர்" என தெரிவித்தது.
இந்த தாக்குதலை இங்கிலாந்து கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது. அமெரிக்க கடற்படையின் மத்திய கிழக்கு 5-வது பிரிவும் உறுதி செய்தது. ஆனால் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இந்த தாக்குதல், எச்சரிக்கை தாக்குதல் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், அரசு படைகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகத்தான், கிரீஸ் எண்ணெய் கப்பலை குறி வைத்ததாக தெரிவித்துள்ளனர். இது பற்றி ஏமன் அரசு தரப்பில் கூறும்போது, "இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இது அமைதிப்பேச்சு வார்த்தையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்" என தெரிவித்தனர். சமீபத்தில் தனது ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய 3-வது டிரோன் தாக்குதல் இது எனவும் அரசு தரப்பில் தெரிவித்தனர்.