இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி
|இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானின் இடைக்கால அரசில் மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார். 2019 இல் கைது செய்யப்பட்டு பின்னர் மே 2022 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிகப் பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரின் மந்திரி சபையில் யாசின் மாலிக்கின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி வியாழக்கிழமை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். பாகிஸ்தானின் மனித உரிமைகள் மந்திரியாக யாசினின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி 2019 இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
யாசின் மாலிக், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் பட்டம் பெற்ற முஷல் ஹுசைன் முல்லிக்கை 2009 இல் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் சில அரசியல் தலைவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு 10 வயது மகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஷலின் தாயார் ரெஹானா ஹுசைன் முல்லிக் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் மகளிர் பிரிவில் உறுப்பினராகவும் அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். முஷலின் தந்தை எம் ஏ ஹுசைன் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் ஆவார்.