நெருப்புடன் விளையாடவேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
|தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடவேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் பேசினர். சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்று உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறையும் தொலைபேசி மூலம் மட்டுமே உரையாடியுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
விரைவில் இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்துள்ளனர்.இந்த பேச்சு வார்த்தையின் போது தைவான் பிராந்தியத்தின் கொள்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கியமாக விவாதித்துள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது சீனாவை கடும் எரிச்சல் அடைய செய்கிறது. எனவே, ஜனாதிபதி பைடனுடனான பேச்சின் போது, தைவான் விவகாரம் குறித்து ஜி ஜிங்பிங் சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என கேட்டு கொண்டார்.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.