ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு...!! மக்கள் வெளியேற்றம்..!!
|இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மீது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதில் உள்ள மக்களை அரசாங்கம் தற்காலிகமாக வெளியேற்றி உள்ளது.
பெர்லின்,
ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ப் பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மக்களையும் அந்த பகுதியிலிருந்து தற்காலிகமாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் கூட தற்காலிகமாக மூடப்பட்டன. சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது தங்கள் செல்லப்பிராணிகளை அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அதிகாரிகள் வெடிகுண்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன் இரண்டு முறை ஜெர்மனியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில், பிராங்பர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சுமார் 65 ஆயிரம் மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் டிசம்பர் 2021ஆம் ஆண்டில் முனிச் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விமானப்படைகள் ஐரோப்பாவில் 2.7 மில்லியன் டன் குண்டுகளை வீசின. அவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன. போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டன. பல வருடங்கள் ஆன பிறகும் அவை கண்டெடுக்கப்படும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.