உலகில் முதன்முறையாக அமெரிக்காவில் தேனீக்களுக்கு நோய்த் தடுப்பு மருந்து
|அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான நோய்த் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
வாஷிங்டன்,
தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம் செய்து காய், கனிகளை உற்பத்தி செய்ய முடியும். எனவே தேனீக்கள் இல்லாத உலகில் மற்ற எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
அமெரிக்காவில் பலர் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் தேனீக்கள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த தேனீக்களை பாக்டீரியாக்கள் தாக்குவதால் அவற்றுக்கு பவுல் புரூட் என்ற நோய் ஏற்பட்டு வந்தது. இது தேனீ வளர்ப்போருக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க வேளாண்மை துறை இந்த தடுப்பு மருந்துக்கு தற்போது ஒப்புதல் அளித்து உள்ளது. இது அங்கு தேனீ வளர்ப்போரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.