< Back
உலக செய்திகள்
சந்திரயான்-3 வெற்றி: உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் - பாகிஸ்தான் மக்களும் பாராட்டு
உலக செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் - பாகிஸ்தான் மக்களும் பாராட்டு

தினத்தந்தி
|
24 Aug 2023 4:41 AM IST

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்து இமாலய சாதனை படைத்தது குறித்து உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

லண்டன்,

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்து இமாலய சாதனை படைத்தது குறித்து உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க-இந்திய வியூகக் கூட்டாண்மை மன்றத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகேஷ் அகி, இந்திய மக்களுக்கு இது ஒரு வரலாற்றுத் தருணம் என்றார்.

சிங்கப்பூர் அபெக்ஸ் அட்வைசர்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஜா பாண்டே இஸ்ரோவின் இந்த அற்புதமான அறிவியல் சாதனையில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் விரிவுரையாளராகவும், விண்கல என்ஜினீயராகவும் உள்ள டாக்டர் லியா-நானி அல்கான்செல் சந்திரயான்-3 தரையிறக்கம் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பல ஆண்டுகால தீவிர உழைப்பின் முதலீட்டின் முடிசூடும் சாதனை என பெருமிதம் தெரிவித்தார்.

அதேபோல் இந்திய-இங்கிலாந்து சிந்தனைக் குழு, இந்தியாவின் இந்த முன்னோடி மற்றும் தைரியமான பயணம் பிரபஞ்சத்தை பற்றிய ஆழமான அறிவிற்கான தேடலில் ஒரு மாபெரும் பாய்ச்சல் என்று கூறியது.

இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் உள்ள இந்திய-வம்சாளி தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தியாவின் இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை, இந்தியாவுக்கு விரோதமான நாடாக கருதப்படும் பாகிஸ்தானிலும் கூட பாராட்டப்பட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டம் அண்டை நாட்டில் உள்ள சாமானியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் வசிக்கும் அயூப் அக்தர் இதுபற்றி கூறுகையில், "இந்தியா முன்னேறி வருகிறது, நாங்கள் எங்கும் இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்