வேலைக்காக வெளிநாடும் செல்லும் பெண்கள் பாலியல் அடிமைகளாக ஏலம்...! அதிகாரிகள் துஷ்பிரயோகம்
|இலங்கையில் இருந்து வேலைக்காக வெளிநாடுச் எல்லும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு அடிமைகளாக ஏலம் விடப்படுவதாக புகார் குவிகின்றன.
கொழும்பு
ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலை செய்யச் சென்ற இலங்கை பெண் ஒருவர் சமீபத்தில் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரில் ஓமனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரை ஓமனுக்கு அனுப்பினர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த பெண்கள் ஓமனில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது உறுதியானது.
இது தொடர்பாக இலங்கை போலீஸ் அதிகாரி நிஹால் தல்துவா கூறுகையில், "அங்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் வயது மற்றும் தோற்றத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் பாலியல் தொழிலாளர்களாகவும் செக்ஸ் அடிமைகளாகவும் ஏலம் விடப்படக் கொடுமையும் நடந்துள்ளது" என்றார்.
இந்தச் சம்பவத்தில் வெளிநாடுகளில் இலங்கை வெளியுறவுத் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதுபோன்ற புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமன் நாட்டிற்குச் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை தடை விதித்துள்ளது.
வீட்டு வேலைக்கு சென்று ஓமனில் சிக்கி உள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது .
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;-
ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தால் நிர்வகிக்கப்படும் இல்லத்தில் 90பெண்கள் தங்கியுள்ளனர். அந்த தங்குமிடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை
இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவம் காரணமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்
நான் ஓமனிற்கு வந்து மூன்று வருடங்களாகின்றன நான் கடந்த மாதம் இங்கு வந்தேன் ஆனால் அவர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கின்றார்கள் இல்லை அதிகாரியிடம் எனது பாஸ்போர்ட், டிக்கெட்டும் உள்ளது அவர் அவற்றை கிழித்துவிடப்போவதாக மிரட்டுகின்றார். அவர் என்னை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றார்.
நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை நான் ஒரு மாதகாலமாக முடங்கியநிலையில் இருக்கின்றேன். அந்த அதிகாரி எனது ஆவணங்களை பரிசலீப்பதற்கு மறுக்கின்றார் என கூறி உள்ளார்.
குறிப்பிட்ட நபர் பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்கின்றார். அதோடு பல பெண்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.