பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம்.பி.
|பிரிட்டன் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.
லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா ( வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்தான். 1987 - ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில், நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 'லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.