< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தில் இந்திய பெண் குத்திக்கொலை: திருமணத்துக்காக தாயகம் வர இருந்த நிலையில் சோகம்
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய பெண் குத்திக்கொலை: திருமணத்துக்காக தாயகம் வர இருந்த நிலையில் சோகம்

தினத்தந்தி
|
14 Jun 2023 11:33 PM GMT

இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

லண்டன்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார்.

பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த தேஜஸ்வினி, அங்கேயே தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். அவர் லண்டனின் வெம்ப்லே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

வீடு புகுந்து கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேஜஸ்வினியின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்ற 23 வயது இளைஞர் தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த பெண்ணையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர்.

பிரேசில் இளைஞர் கைது

ஆனால் அதற்குள் தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றொரு பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரேசில் நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இளைஞரையும் கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உருக்கமான தகவல்

இதனிடையே தேஜஸ்வினி தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் தந்தை இது குறித்து கூறியதாவது:-

3 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்ற அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐதராபாத் வந்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே அவர் லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த மாதம் அவர் ஐதராபாத் வருவதாக இருந்தார். நாங்கள் அவருக்கு திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வந்தததால், திருமணம் நிச்சயம் ஆனதும், இந்தியா வருகிறேன் என கூறிவிட்டு லண்டனிலேயே இருந்துவிட்டார். அதன்படி அவர் விரைவில் அவர் இந்தியா வர இருந்தார்.

இவ்வாறு தேஜஸ்வினியின் தந்தை கூறினார்.

உடலை இந்தியா கொண்டுவர...

தேஜஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை இங்கிலாந்தில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணத்துக்காக தாயகம் வர இருந்த இந்திய பெண் இங்கிலாந்தில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்