பிலிப்பைன்சில் கடத்தப்பட்டு 20 நாட்கள் நாய்க் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பெண் சாமர்த்தியமாக தப்பியோட்டம்!
|பிலிப்பைன்ஸ் நாட்டில் சீன இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பர் முன்னிலையில் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பர் முன்னிலையில் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
பம்பாங்கா மாகாணத்தின் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவுநேர கேளிக்கை விடுதியில் அந்த இளம்பெண் தன் நண்பருடன் சென்றுள்ளார். அதன் பின், அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.
அந்த பெண், இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் கொண்ட கும்பல் வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்திச் செல்லப்பட்டார் என்று போலீசிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் கடத்தப்பட்ட பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவருடைய காதலனிடம் 2 லட்சம் டாலர்கள் தரும்படி மிரட்டல் வந்துள்ளது.மேலும், அவரது போனில், அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து வீடியோ ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் கடத்தப்பட்ட அவரது காதலி பேஸ்பால் மட்டையால் அடிக்கப்படுவது படமாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட அந்த சீனப் பெண் தப்பிச் சென்றுள்ளார். அவர் ஒரு கடையில் ஷாப்பிங் செய்யும்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சீனாவின் ஷாங்காய் பகுதியை பூர்வீகமாக கொண்ட பெண், போலீஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்களிடம் தான் 20 நாட்கள் நாய்க் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
அதன் பின், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் போலீஸ் சோதனை நடந்தது. ஆனால் அவரைக்கடத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டவர்கள் தப்பிவிட்டனர். எனினும், அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சில தலையணைகள் மற்றும் சிவப்பு வாளி அடங்கிய நாய்க் கூண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட பெண் எப்படி நாய் கூண்டிலிருந்து விடுபட்டு தப்பினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.