பாகிஸ்தான் ராணுவ தளபதியை தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை விடமாட்டேன்: இம்ரான் கான்
|பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை விடமாட்டேன் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று கூறியுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கான் லாகூர் நகரில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும்போது, பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி யாரென தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை நான் விடமாட்டேன் என கூறியுள்ளார். ராணுவ தலைமை தளபதி நற்பண்புகளை கொண்ட தகுதி வாய்ந்த நபராக இருக்க வேண்டும். அந்த பணியை ஏற்க திருடர்களை ஒருபோதும் அனுமதித்து விட கூடாது என்று கூறியுள்ளார்.
அவரது கட்சி நாளை பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. உண்மையான முறையில் விடுதலை பெற்ற நமது நாட்டை நாம் அடைவோம் என்றும் அவர் பேசும்போது குறிப்பிட்டார்.
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து நமக்கு அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு, பதில் மிரட்டல் விடவேண்டும் என நேற்று பேசும்போது அவர் கூறினார். இதனையே கடந்த திங்கட்கிழமை அவர் சக்வால் பகுதியில் பேசும்போதும் குறிப்பிட்டார்.