ஷேக் ஹசீனா விவகாரம்: இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு: வங்காளதேசம்
|ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்கட்சி தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் மீண்டும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
டாக்கா,
வங்காள தேசத்தில் தியாகிகளின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன் முறை வெடித்தது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதன் எதிரொலியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த மூத்த மந்திரிகள், பதவி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
அவர்கள் மீது இனப்படுகொல, சித்ரவதை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஹசீனா உள்ளிட்டவர்களை கைது செய்யக்கோரி அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான வங்காள தேச தேசிய கட்சி தலைநகர் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்து உள்ளது.ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஷேக் ஹசீனாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்கட்சி தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் மீண்டும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. இதனிடையே, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை மந்திரி முகமது தவுஹித் ஹுசைன் தெரிவித்துள்ளார்.