கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்க மக்கள் மோசமான காற்றை சுவாசிக்கும் அபாயம்
|அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
கனடாவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீயை அணைப்பதற்காக கனடா அரசாங்கம் அண்டை நாடுகளின் உதவியையும் நாடி உள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அண்டை நாடான அமெரிக்காவிலும் பல இடங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு முகமூடி அணிந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காற்றின் தரம் குறித்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அளவீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் நியூயார்க், பென்சில்வேனியா உள்பட முக்கிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியதாக பதிவாகி உள்ளது. இந்த அளவு 300-ஐ தாண்டினாலே ஆபத்து என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.