< Back
உலக செய்திகள்
அல்ஜீரியா காட்டுத்தீயால் 26 பேர் எரிந்து கரிக்கட்டைகளான பரிதாபம்
உலக செய்திகள்

அல்ஜீரியா காட்டுத்தீயால் 26 பேர் எரிந்து கரிக்கட்டைகளான பரிதாபம்

தினத்தந்தி
|
19 Aug 2022 4:28 AM IST

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதில் சிக்கி மேலும் 26 பேர் பலியாகி உள்ளனர்.

அல்ஜீயர்ஸ்,

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் வட பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 8 மாகாணங்கள் காட்டுத்தீயின் தாக்குதலின் கீழ் சிக்கி உள்ளன. இந்த தீயில் துனிசியா எல்லை நகரமான எல் டார்ப் நகரைச் சேர்ந்த 24 பேர் எரிந்து கரிக்கட்டைகள் போல ஆகினர். மேலும் செட்டிப் நகரில் காட்டுத்தீக்கு ஒரு தாயும், மகளும் இரையானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 11 பேர் காட்டுத்தீக்கு இரையாகி இருந்தனர்.

இந்த உயிரிழப்புகளை அல்ஜீரியாவின் உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் உறுதி செய்தார். காட்டுத்தீயில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் அப்தெல் மஜித் டெப்பவுன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

காட்டுத்தீயை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் முழுவீச்சில் களம் இறங்கி உள்ளனர். ஆனாலும் கட்டுக்குள் வராத இந்த காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறும்போது, "எல்டார்ப் நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 16 இடங்களில் காட்டுத்தீ பரவி இருக்கிறது" என தெரிவித்தது.

வடக்கு அல்ஜீரியா ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீயால் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டும்கூட அங்கு காட்டுத்தீயில் சிக்கி 90 பேர் பலியானதுடன் 1 லட்சம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சாம்பலானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்