ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்த அமெரிக்க கோர்ட்டு - பல ஆண்டு சட்டப்போராட்டம் முடிவு
|உளவு வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்க கோர்ட்டு விடுதலை செய்தது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டார்.
வாஷிங்டன்,
விக்கிலீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சே மீது உளவு வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியது.
இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
அதேவேளை, இங்கிலாந்து சிறையில் இருந்த அசாஞ்சே, அமெரிக்காவின் நீதித்துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் ஆஜராகவும் ஒப்புக்கொண்டார்.
உளவு குற்றத்திற்கு அமெரிக்காவில் 62 மாதங்கள் (1,860 நாட்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், அசாஞ்சே ஏற்கனவே 1,901 நாட்கள் இங்கிலாந்து சிறையில் இருந்துள்ளார். இதனால், ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அதற்கான தண்டனையை ஏற்கனவே இங்கிலாந்து சிறையில் அனுபவித்ததால் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நீதித்துறை சம்மதம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து சிறையில் இருந்து அசாஞ்சே நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அசாஞ்சே தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். இன்று அவர் அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜரானார். மெரினா தீவு அசாஞ்சேவின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் உள்ளது.
கோர்ட்டில் ஆஜரான அசாஞ்சே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை திரட்டி உளவு வேலையில் ஈடுபட்டதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, உளவு குற்றச்சாட்டிற்காக அசாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் 2 மாதங்கள் (ஒட்டுமொத்தமாக 62 மாதங்கள்) சிறை தண்டனை விதித்தது. ஆனால், அசாஞ்சே ஏற்கனவே இங்கிலாந்தில் 62 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டதால் அவர் விடுவிக்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்தது. இதனை தொடர்ந்து உளவு வழக்கில் இருந்து ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அமெரிக்காவின் மெரினா தீவில் இருந்து விமானம் மூலம் ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியா புறப்பட்டார். இதன் மூலம் ஜூலியன் அசாஞ்சேவின் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.