< Back
உலக செய்திகள்
பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...
உலக செய்திகள்

பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...

தினத்தந்தி
|
10 Nov 2022 3:06 PM IST

பூமியில் முதன்முதலில் பெருமளவிலான உயிரின பேரழிவு ஏற்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.



விர்ஜீனியா,


நாம் வாழும் பூமியில் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக்கான தேடல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. பல்வேறு கால கட்டங்களில் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பல காரணங்களால் அழிந்து போயுள்ளன. இதுவரை பெரிய அளவில் 5 முறை பூமியில் உயிரினங்கள் அழிந்த அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

அவை, ஆர்டோவிசியன்-சிலூரியன் அழிவு (440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்), தேவோனியன் அழிவு (370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்), பெர்மியன்-ட்ரயாசிக் அழிவு (250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்), ட்ரயாசிக்-ஜுராசிக் அழிவு (200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) மற்றும் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் அழிவு (65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆனால், குறிப்பிட்ட இந்த கால கட்டங்களில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போனதற்கான சரியான காரணங்கள் பற்றிய விவரம் இதுவரை தெரிய வரவில்லை.




இதுபற்றி அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள விர்ஜீனியா அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியின் புவி அறிவியல் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்காட் இவான்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பாறைகளில் உள்ள புதைபொருள் படிவங்களை பற்றிய ஆய்வில் அவர்கள் ஈடுபட்டனர். அதில் பல ஆச்சரிய தகவல்கள் கிடைத்து உள்ளன. நாம் இன்று வகைப்படுத்தும் விலங்குகளை போன்று, முதன்முதலில் நடந்த பேரழிவுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் அவற்றுடன் பொருந்தி இருக்கவில்லை.

இதில் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவெனில், இந்த பேரழிவானது, விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிவதற்கு வழிவகுத்து உள்ளது என இவான்ஸ் கூறுகிறார்.

அவற்றுள் உலகளாவிய வெப்பமயமாதல், ஆக்சிஜன் வற்றி போதல் நிகழ்வுகள் உள்ளிட்ட சுற்று சூழல் மாற்றங்கள் இந்த விலங்கினங்களின் பேரழிவுக்கு வழிவகுத்து, சூழலியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு ஏற்பட்டு உள்ளது என ஆய்வு குழுவினர் விளக்கம் தெரிவித்து உள்ளனர்.

புவி வரலாற்று ஆய்வில், முதன்முதலில் பேரழிவை சந்தித்த புதைபொருள் படிவத்தின் ஆவண பதிவு உள்பட தொடர்ச்சியாக இந்த விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. உயிர்க்கோளத்தில் நடப்பு சுற்று சூழல் மாற்றங்களின் நீண்டகால பாதிப்புகளை பற்றி இந்த ஆய்வு நமக்கு எச்சரிக்கை தெரிவிக்கின்றது என ஆய்வு குழுவில் ஒருவரான சுஹாய் ஜியாவோ கூறுகிறார்.


புகைப்படம்:  ஸ்காட் இவான்ஸ்

புகைப்படம்: ஸ்காட் இவான்ஸ்


இதேபோன்று, பல்வேறு வகையான விலங்கின பேரழிவின்போது, அவை பிராணவாயுவை அதிகம் சார்ந்து இருக்க கூடிய உடல் அமைப்புகளையும், அணுகுமுறைகளையும் கொண்டிருந்ததுடன், அவை கிடைக்காமல் உயிரிழந்ததும் புதைபொருள் படிவத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் இருந்து, பேரழிவுக்கு உலகளாவிய தேவையான ஆக்சிஜன் குறைந்து போனதே அடிப்படை காரணம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

சரி. திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வெவ்வேறு விலங்கின பேரழிவு ஏற்பட்டு உள்ளது. ஆனால், அவற்றுக்கான சரியான பின்னணி என்பது பற்றி விஞ்ஞானிகள் அறிய முற்பட்டதில், அந்தந்த கால கட்டத்தில் ஏற்பட்ட எண்ணற்ற நிகழ்வுகளின் விளைவால் பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும் என அவர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இதன்படி, எரிமலை வெடிப்புகள், டெக்டானிக் தட்டுகள் நகர்வு, விண்கல் தாக்குதல் உள்பட பல நிகழ்வுகளின் கூட்டு விளைவால் பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும். ஆனால், நாம் காண்பது என்னவெனில், உலகம் முழுவதும் ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து பேரழிவை நோக்கி விலங்கினங்கள் சென்றுள்ளன என்பதே என இவான்ஸ் கூறுகிறார்.

இதனால், உலக அளவில் நன்னீரில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பருவநிலை மாறுபாடு மற்றும் நில பயன்பாட்டால் ஏற்பட்ட அதிகப்படியான மாசுபாடு போன்றவற்றால் நீர்நிலைகள் வெப்பமடைந்து ஆக்சிஜன் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடல் நீர் வெப்பமடைந்து, ஆக்சிஜனை தக்க வைத்து கொள்ளும் நன்னீரின் திறன் மறைந்து போயுள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இதனை கவனத்தில் கொள்ளும்போது, பூமியின் கடந்த கால அனைத்து பேரழிவுகளுடன், இந்த முதல் விலங்கின பேரழிவும், பெரிய அளவிலான பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்டு உள்ளது. தற்போது காணப்படும் பருவகால நெருக்கடி சூழலால் விலங்கின வாழ்வுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை விளக்க கூடிய, முன்னெச்சரிக்கை விவரங்களை கொண்ட, ஒரு நீண்ட பட்டியலில் இதுவும் சேருகிறது என இவான்ஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்