பிரபஞ்ச அழகி போட்டியில் மகுடம் சூடுவாரா ஸ்வேதா ஷர்தா?
|டான்ஸ் இந்தியா டான்ஸ், டான்ஸ் தீவானே, டான்ஸ் பிளஸ் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ஸ்வேதா ஷர்தா.
பேஷன் மற்றும் அழகுக்கலை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 72வது பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடாரில் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் இறுதிச்சுற்று நாளை காலை (உள்ளூர் நேரப்படி இன்று இரவு) பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
எல் சால்வடாரின் சான் சால்வடாரில் நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்கிறார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர்.
மிஸ் திவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா ஷர்தாவின் வீடியோவைப் பகிர்ந்து, "இதோ உங்கள் லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023 ஸ்வேதா ஷர்தா வருகிறார், என்று பதிவிடப்பட்டிருந்தது.
யார் இந்த ஸ்வேதா ஷர்தா?
* ஸ்வேதா ஷர்தா மே 24, 2000 அன்று சண்டிகரில் பிறந்தார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட அவர் மாடலிங் தொழிலைத் தொடர 16 வயதில் மும்பைக்குச் சென்றார்.
*ஸ்வேதா தனது கல்லூரி படிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து, இளங்கலை பட்டம் பெற்றார்.
*இவர் டான்ஸ் இந்தியா டான்ஸ், டான்ஸ் தீவானே, டான்ஸ் பிளஸ் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அவர் நடன ரியாலிட்டி ஷோ ஜலக் திக்லா ஜாவில் நடன இயக்குனராகவும் இருந்தார்.
*ஜுபின் நௌடியல் மற்றும் துளசி குமார் ஆகியோரின் மஸ்த் ஆன்கெய்ன் பாடலுக்கான இசை வீடியோவில் கங்குபாய் கதிவாடி நடிகர் சாந்தனு மகேஸ்வரியுடன் இணைந்து நடித்துள்ளார்.
*ஸ்வேதா இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 நடந்த மிஸ் திவா யுனிவர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிஸ் திவா பட்டத்தை பெற்றவர்.