இந்தியா நிலவை அடைந்தபோது, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தது: நவாஸ் ஷெரீப் பேச்சு
|இந்தியா நிலவை அடைந்தபோது, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தது என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். அவர் லண்டன் நகரில் வீடியோ இணைப்பு வழியே பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இந்தியா நிலவை அடைந்து, ஜி-20 உச்சி மாநாட்டு கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார். இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு? என கேட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, ரூ.8,300 கோடி அவர்களுடைய கைவசம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.49.94 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. இரட்டை இலக்க பணவீக்கம் எதிரொலியாக ஏழைகள் நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளனர். விலைவாசி, எரிபொருள் உயர்வை சந்திக்க முடியாமல் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவாக, ரூ.24,973 கோடியை விடுவிக்க சர்வதேச நிதியம் முன்வந்தது. இவற்றில், ரூ.9,989 கோடியை பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் செய்தது. எனினும், தொடர்ந்து அந்நாடு பொருளாதார சரிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.