மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்
|ஜோ பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.
81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார். இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவேன் என பைடன் பிடிவாதமாக உள்ளார்.
இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அவரது மனநலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுத்து அவருக்கு புரிய வைக்கிறார். அதன் பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது. பலரும் பைடனின் இந்த செயலை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.