அடுத்த 50 ஆண்டுகளில் துபாய் எப்படி இருக்கும்? - திகைப்பூட்டும் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள்
|அடுத்த 50 ஆண்டுகளில் துபாய் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு விடையளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் பரவி வருகின்றன.
துபாய்,
துபாய் நகரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலக அளவில் நவீன தொழில்நுட்பங்களும், எதிர்கால பயன்பாட்டு சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் முக்கிய மையமாக துபாய் இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் நடைமுறைகள் உலக அளவில் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
அதிலும் அந்த வளர்ச்சிக்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. துபாய் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தலைவர்களின் தொலைநோக்கு பார்வையில் நகரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் ஹைப்பர் லூப், பறக்கும் டாக்சி போன்ற போக்குவரத்து சாதனங்கள் இன்னும் உலகை திரும்பி பார்க்க வைக்க உள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் துபாய் நகரம் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு மனிதர்கள் தங்கள் கற்பனையாற்றலின் வரம்புக்குள் மட்டுமே சிந்தித்து பார்க்க முடிகிறது. ஆனால் அப்போது துபாயின் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படம் பிடித்து காட்டியுள்ளது.
பறக்கும் வாகனங்கள், கட்டிடங்களில் வளரும் காடுகள், இயற்கை அருவிகள் போன்ற அமைப்பு, நகரை சுற்றி வரும் பறக்கும் சுற்றுலா ஊர்தி, இதுவரை மனிதர்கள் கற்பனை செய்ய முடியாத கட்டுமானங்கள் என அந்த புகைப்படங்கள் திகைப்பூட்டுகிறது.
அடுத்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற காட்சிகளை அடுத்த தலைமுறையினர்தான் இவற்றை பார்க்க முடியும் என்பவர்கள் புகைப்படத்தை பார்த்து திருப்தியடைந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.