என்ன உதை...!! தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வினோத முறையில் காப்பாற்றிய வீரர்
|ஜப்பானில் கீழே குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டிய இளம்பெண்ணை திடீரென உதைத்து, வீட்டுக்குள் தள்ளி தீயணைப்பு வீரர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டில் இளம்பெண் ஒருவர் தனது குடியிருப்பின் ஜன்னல் பகுதியில் அமர்ந்து கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து மிரட்சி அடைந்து உள்ளனர்.
இதன்பின்பு, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சென்றது. இதன்படி, அந்த இளம்பெண்ணை மீட்க தீயணைப்பு வீரர் ஒருவர் உடனடியாக சென்றுள்ளார். அவர் அந்த பெண்ணை நூதன முறையில் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த குடியிருப்பின் மேல் தளம் வழியே, மீட்பு பணிக்கான உபகரணங்களை இடுப்பில் கட்டி கொண்டு பாதுகாப்புடன் கீழே இறங்கி உள்ளார். பின்னர், திடீரென சுவரில் இருந்து உந்தி தள்ளி பின்னே சென்று, அப்படியே கீழே சென்று, அந்த பெண் எதிர்பாராதபோது அவரை இரு கால்களாலும் உதைத்து, அவரது குடியிருப்பிற்குள்ளேயே தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர்.
இவரது இந்த புதிய முயற்சியை பலர் பாராட்டியுள்ளனர். ஒரு சிலர் அந்த பெண்ணின் நிலைமை பற்றி கவனத்தில் கொள்ளாதது பற்றி கேள்வியும் எழுப்பியுள்ளனர். ஒரு பயனாளர் என்ன ஒரு உதை?என்றும், என்ன வகையான மீட்பு பணி இது என்று மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.
அந்த பெண் ஒரு பெண்ணியாவதி என்றால், அவரது ஒப்புதல் இல்லாமல் இப்படி செய்ததற்காக அந்த தீயணைப்பு வீரர் மீது வழக்கு தொடரலாம் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.