"உங்களுக்கு என்ன பயன்.?": ரஷியாவிற்கு டிரோன்கள் வழங்கும் ஈரானை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி
|ரஷியாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
கீவ்,
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் ரஷியா, சமீப காலமாக, ஈரானில் இருந்து தயாரிக்கப்பட்ட ஷாஹெட் வகை டிரோன்களை கொண்டு உக்ரைனின் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவிற்கு டிரோன்களை வழங்கி வரும் ஈரானை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"எளிமையான கேள்வி இதுதான்.. ரஷிய பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருப்பதில் உங்கள் ஆர்வம் என்ன?" இவ்வாறான தாழ்ந்த செயல்களை செய்வதால் ஈரானுக்கு என்ன பயன்.? உக்ரைனைப் பயமுறுத்தும் உங்கள் ஷாஹெட்ஸ், டிரோன்களால், ஈரான் மக்கள் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு ஆழமாக தள்ளப்படுகிறார்கள். என்று ஜெலன்ஸ்கி தனது ஆதங்கத்தை பதிவுசெய்தார்.
மேலும், ரஷியாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.