< Back
உலக செய்திகள்
பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்
உலக செய்திகள்

பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்

தினத்தந்தி
|
24 Nov 2022 7:15 AM IST

பூமியின் இரட்டை சகோதரி என கூறப்படும் வெள்ளி கிரகத்தின் மரணத்திற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.



வாஷிங்டன்,


சூரிய குடும்பத்தில் உள்ள நாம் வாழும் பூமியின் இரட்டை சகோதரிகளில் ஒன்றாக வெள்ளி கிரகம் கூறப்படுகிறது. முந்தின காலங்களில் பூமியை போன்றே பல அம்சங்களை வெள்ளி கிரகம் கொண்டிருந்து உள்ளது.

எனினும், காலப்போக்கில் அவை எல்லாம் மாறி விட்டது. இன்று அந்த கிரகம் அமில சுற்று சூழலை கொண்டுள்ளது. காரீயம் போன்ற உலோகம் போட்டால் கூட அது உருகி விடும். அந்த அளவுக்கு உருமாறி இருக்கிறது.

இந்த அளவுக்கு மாறியுள்ளதற்கு என்ன காரணம் என்ற ரகசியங்களை அறிவதற்கு விஞ்ஞானிகளிடையே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. அதுபற்றிய ஆய்வில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதிக குளிரோ, வெப்பமோ அல்லாத மித அளவிலான தட்பவெப்பத்துடன், ஈரப்பதம் கொண்டிருந்த அந்த கிரகம் பின்னர் எப்படி அமிலத்தன்மை கொண்ட அதிக வெப்பம் நிறைந்த ஒன்றாக மாறியது என்பது பற்றி புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட தொடர் எரிமலை வெடிப்பு செயல்களே இதற்கான காரணம் என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.




நாசாவின் விண்வெளி ஆய்வுக்கான மையத்தின் ஆய்வாளர் மைக்கேல் ஜே. வே கூறும்போது, பூமி மற்றும் வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட வெடிப்புகள் பற்றிய பதிவுகளை புரிந்து கொள்வதன் வழியே, தற்போது வெள்ளி கிரகம் இருப்பதற்கான சூழ்நிலை பற்றி ஒரு தீர்மானத்திற்கு நாம் வரமுடியும் என கூறியுள்ளார்.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியில் பல பேரழிவுகள் ஏற்பட்டன. இதனால், பல உயிரினங்கள் காணாமல் போய் விட்டன. இதுவரை எரிகல் மோதி பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும் என்ற நம்பிக்கைக்கு மாற்றாக, இந்த ஆய்வு முடிவு உள்ளது. இதுபோன்ற வெடிப்புகளாலேயே அவை நிகழ்ந்து உள்ளன என ஆய்வு தெரிவிக்கின்றது.

பெரிய அளவிலான எரிமலை வெடிப்பு, பூமியின் நீண்டகால வாழ்விட பகுதியில் ஒரு சிக்கலான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, பூமியின் வரலாறு முழுவதும் காணும்போது, பெரிய அளவிலான பேரழிவு நிகழ்வுகளுக்கு இந்த எரிமலை வெடிப்புகளே பொறுப்பு என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த வெடிப்புகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துள்ளன.

இதனால், 1 லட்சம் கனசதுர மைல்களுக்கும் கூடுதலாக எரிமலை பாறைகள் பரவியுள்ளன. இவற்றால், பழங்கால பூமியில் அதிக வெப்பநிலை ஏற்பட தொடங்கியிருக்கும். இதன் தொடர்ச்சியாக, கட்டுக்கடங்காத பசுமை இல்ல விளைவு தோன்றியிருக்கும் என ஆய்வு கூறுகிறது.

வெள்ளி கிரகத்தில் தற்போது சராசரியாக 462 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது. பூமியின் மேற்பரப்பு அழுத்தத்தின் மதிப்பில் 90 மடங்கு கூடுதாக வெள்ளியின் வளிமண்டலம் உள்ளது. இந்த நிகழ்வு எப்படி ஏற்பட்டது என நாம் உறுதி செய்ய முடியாதபோதும், பூமியின் சொந்த வரலாற்றை படித்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வாளர் வே கூறுகிறார்.

வெள்ளி கிரகத்தின் 80% மேற்பரப்பு திடநிலையிலான எரிமலை பாறாங்கற்களால் நிறைந்து காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். பூமியானது 5 மிக பெரிய பேரழிவை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. இந்த பேரழிவுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருமளவு பேரழிவு, எரிமலை வெடிப்புகளாலேயே ஏற்பட்டு உள்ளன.

எனினும், வெள்ளி கிரகத்தில் இருப்பது போன்ற கட்டுக்கடங்காத, பசுமை இல்ல விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த வெடிப்புகள் பூமியில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்