கஜகஸ்தான் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு வரவேற்பு
|கஜகஸ்தான் நாட்டுக்கு இன்றிரவு சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை அந்நாட்டின் துணை வெளியுறவு மந்திரி அலிபெக் பகாயேவ் வரவேற்றார்.
அஸ்தானா,
கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.
இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கடந்த 2 தசாப்தங்களாக மேற்கொண்ட மாநாட்டின் நடவடிக்கைகளை பற்றி தலைவர்கள் மறுசீராய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பலன்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்த கூட்டத்தில், மண்டல மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதனை முன்னிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கர், கஜகஸ்தான் நாட்டுக்கு இன்றிரவு சென்றடைந்துள்ளார். அவரை அந்நாட்டின் துணை வெளியுறவு மந்திரி அலிபெக் பகாயேவ் வரவேற்றார். இதனை கஜகஸ்தான் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.