'வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
|இறுதி வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் குறித்து பேசியபோது, "காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் இறுதி வரை போரை தொடர்வோம். இதற்கு மேல் எந்த கேள்வியும் இல்லை. மிகுந்த வலியுடனும், சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இதை நான் கூறுகிறேன். எங்களை எதுவும் தடுத்து நிறுத்தாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.