< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
"உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" - ஜெலன்ஸ்கியிடம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதி
|26 Oct 2022 5:56 AM IST
ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் 3-ம் சார்லஸ் அறிவித்தார். இதையடுத்து ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது, "நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன்" என்று கூறினார்.
இதையடுத்து ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்ததாக இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.