'இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறோம்' - அமெரிக்கா
|இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை அந்த இரு நாடுகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். நாங்கள் அதை தீர்மானிக்க முடியாது.
உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு திறன் மேம்பாட்டு திட்டங்களில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா பாதுகாப்பு கூட்டாளியாக இருக்கிறது. மேலும் அமெரிக்கா-பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையிலான கூட்டு பயிற்சிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் நாங்கள் தொடர்ந்து உரையாடி வருகிறோம். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான எங்களது வருடாந்திர உரையாடல்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் விரிவாக விவாதிப்போம்."
இவ்வாறு மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.